பலத்த மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் பலத்தமழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பலத்தமழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பலத்த மழை பெய்தது
மன்னர்வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடங்கிய மழை நேற்று வரை நீடித்தது. இந்த மழை தொடர்ந்து பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. பழுதடைந்த சாலைகளில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையினால் கட்டுமானம் உள்பட அனைத்து பணிகளும் தேக்கம் அடைந்தது.
அறுவடை பணி பாதிப்பு
தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பலத்த மழை பெய்ததால், சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பல இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து விட்டது. வயல்களில் மழைநீர் தேங்கி சேறாக இருப்பதால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பா அறுவடைக்கு பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி ஒன்றியத்தில் நேற்று காலை முதல் பரவலாக, மிதமான தொடர் மழை பெய்தது. கொரடாச்சேரி, காப்பனாமங்கலம், எண்கண், கண்கொடுத்தவனிதம், முசிறியம், கமலாபுரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த மழை பெய்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணங்களுக்கு சென்று வருவதில் சிரமத்திற்கு உள்ளாகினர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் சம்பா சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி பயிர்கள் சாகுபடியின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தநிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் ஒன்றியத்தில் கண்கொடுத்தவனிதம், எண்கண், காப்பனாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. ஒன்றியத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக கட்டி அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ளனர். அதேபோல் அறுவடை செய்த நெல்லை களங்களிலும் பாதுகாப்பாக தார்பாய்களை கொண்டு போர்த்தி வைத்துள்ளனர். இந்த நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வருகிறது. இதில் இருந்து பாதுகாக்கும் வகையில் தார்ப்பாய்களைக்கொண்டு நெல் மூட்டைகளை விவசாயிகள் மூடி மழை நீரில் இருந்து காப்பாற்றி வருகின்றனர். ஒரு பக்கம் விளைந்த நெல் பயிர்கள் மழையால் சாய்ந்து கிடப்பதும், இன்னொரு பக்கம் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைவதும் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது. உடனடியாக அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளை பத்திரமாக இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி
மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, பைங்காநாடு, சேரன்குளம், மூவாநல்லூர், நெடுவாக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டன.அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் மூட்டைகளாகவும், குவியலாகவும் வைக்கப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க முடியாத நிலையில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலை, மறுபுறம் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாத நிலை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் உளுந்து மற்றும் பருத்தி சாகுபடி பணி பாதிக்கப்பட்டது. இதேபோல நீடாமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் கலந்து ஓடியது. குளிர்ந்த காற்றும் வீசியது.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் திடீரென இரு நாட்கள் மழை பெய்தன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் வீணாகியது. கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்காக ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவைகள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த பகுதியில் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வல்லூர், பாளையக்கோட்டை, சமுதாயம், தென்பரை, எளவனூர், மேலநத்தம் தச்சன்வயல், ராதாநரசிம்மபுரம் ஆகிய ஊர்களில் இருந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
குடவாசல்
குடவாசல் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை மழை கொட்டி தீர்த்தது. கனமழையால் சம்பா, தாளடி நெல் கதிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.