குமரியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.51½ லட்சம் நூதன மோசடி;நைஜீரிய நாட்டு வாலிபர் கைது
இ-மெயில் மூலம் குமரியை சேர்ந்த பெண்ணிடம் நூதன முறையில் ரூ.51½ லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டு வாலிபரை உத்தரபிரதேசத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
நாகர்கோவில்,
இ-மெயில் மூலம் குமரியை சேர்ந்த பெண்ணிடம் நூதன முறையில் ரூ.51½ லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டு வாலிபரை உத்தரபிரதேசத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இ-மெயில்
குமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் மார்க்ரெட் (வயது 61). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நூதன மோசடியால் பாதிக்கப்பட்டது குறித்து பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது இ-மெயில் முகவரிக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில் நான் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மனைவி ஸ்டெல்லா. எனது கணவர் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். அவர் இறக்கும் தருவாயில் இந்திய நாட்டில் உள்ள ஏழை, எளிய குழந்தைகளுக்கு தனது பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் பணத்தை தானமாக வழங்க வேண்டும். இதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பெண்ணிடம் ரூ.51 லட்சம் மோசடி
மேலும் அதில், எனது கணவர் பெயரில் 4 மில்லியன் டாலருக்கு(ரூ.30 கோடியே 15 லட்சம்) பணம் மற்றும் சொத்துகள் உள்ளன. இதில் 2 மில்லியன் டாலரை(ரூ.15 கோடியே 7½ லட்சம்) தங்களது நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு வழங்க உதவ வேண்டும். இதில் 40 சதவீத கமிஷன் தொகை தங்களுக்கு நான் வழங்குகிறேன் என தெரிவித்திருந்தார்.
பின்னர் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், இந்திய நாட்டை சேர்ந்த பல்வேறு வங்கி கணக்குகளை அனுப்பி வைத்தார். நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய 2 மில்லியன் டாலர் தொகையை நீங்கள் பெற, ரூ.52 லட்சம் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்குகளில் செலுத்தும் படி கூறினார்.
இதனை நம்பிய நானும் பல தவணைகளில் அந்த வங்கி கணக்குகளுக்கு ெமாத்தம் ரூ.51 லட்சத்து 60 ஆயிரம் வரை அனுப்பினேன். ஆனால் அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் அந்த நபர் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே என்னிடம் பண மோசடி செய்த நபரை கைது செய்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தீவிர விசாரணை
இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மோசடி வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெண்ணுக்கு வந்த இ-மெயில் முகவரி, செல்போன் அழைப்பு மற்றும் அதன் டவர் சிக்னல் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து கண்காணித்தனர்.
அப்போது செல்போன் சிக்னல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை காண்பித்தது. இதனை தொடா்ந்து இ-மெயில் மற்றும் செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்ட போது, அவை செயலிழந்தது தெரிய வந்தது. சில செல்போன் எண்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நைஜீரியா வாலிபர் கைது
இதனை தொடர்ந்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் தலைமையில் போலீசார் நொய்டாவுக்கு விரைந்து சென்று அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்த எபூக்கா பிரான்சிஸ் (28) என்பவர் இந்த நூதன பணமோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவரையும் அங்கு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நைஜீரியா நாட்டை சேர்ந்த எபூக்கா கடந்த 2016-ம் ஆண்டு வர்த்தகம் சார்ந்த விசா மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர் அவரது விசா காலம் முடிந்தது. இதற்கிடையே அவரது பாஸ்போர்ட்டும் தொலைந்து போனது. இதனால் அவர் நாடு திரும்பாமல் டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக சுற்றி திரிந்துள்ளார். அப்போது அவருக்கு, நண்பர்கள் அறிமுகமாகி உள்ளனர்.
அவர்களில் சிலர் பண மோசடி செய்ய எபூக்காவுக்கு உதவியது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.