மோட்டார் சைக்கிள்கள் மோதல்:தந்தை கண் எதிரே மகன் விபத்தில் சாவு
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை கண் எதிரே மகன் பலியானார்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை கண் எதிரே மகன் பலியானார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட தொழிலாளி
புதுக்கடை அருகே மங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் சிபின் (வயது 25). தந்தையும், மகனும் கட்டிட தொழிலாளிகள். இந்தநிலையில் பணி நிமித்தமாக நேற்று காலையில் சிபின் மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
மூன்று முக்கு பகுதியில் சென்ற போது பள்ளிக்கூட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து சிபின் அந்த வாகனத்தை கடந்து செல்ல முயன்றார்.
விபத்தில் சாவு
அப்போது எதிரே இலவுவிளை பகுதியை சேர்ந்த விஜின்சிங் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சிபின் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை ஜார்ஜ் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் விஜின்சிங்கை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக சிபின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரியாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை கண் எதிரே மகன் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.