குப்பை கிடங்கில் தேடி எடுத்த 5½ பவுன் தங்க சங்கிலி
சிவகங்கையில் குப்பை கிடங்கில் தேடி எடுத்த 5½ பவுன் தங்க சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கையில் குப்பை கிடங்கில் தேடி எடுத்த 5½ பவுன் தங்க சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நகை மாயம்
சிவகங்கை மாளவியார் தெருவில் வசித்து வருபவர் நாகேஸ்வரி (வயது 50). இவருடைய 5½ பவுன் நகை நேற்று காணாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார். நகையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே அந்த வீதியில் தினசரி குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் ஆறுமுகம், ஜெயந்தி ஆகியோர் வழக்கம் போல் அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரித்து சென்று அதற்குரிய இடத்தில் கொட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் நாகேஸ்வரி தூய்மை பணியாளர்களை சந்தித்து தன்னுடைய நகை தொலைந்து போன விபரத்தை கூறி காணாமல் போன நகை குப்பையில் சேர்ந்து கிடந்தால் எடுத்து தரும்படி கூறினார்.
குப்பையில் கிடந்த தங்க சங்கிலி
இதை தொடர்ந்து அவர்கள் தாங்கள் சேகரித்த குப்பையை கொட்டிய இடத்தில் 3 மணி நேரம் தேடி தங்க சங்கிலியை கண்டுபிடித்தனர். பின்னர் தாங்கள் கண்டெடுத்த தங்க சங்கிலியை அதற்கு உரிய உரிமையாளரான நாகேஸ்வரியை சந்தித்து ஒப்படைத்தனர். தொலைந்து போன நகை திரும்ப கிடைத்ததால் நாகேஸ்வரியின் குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் மனதார தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
குப்பையில் கிடந்த தங்க சங்கிலியை நேர்மையுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் இருவரையும் அப்பகுதி மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.