வட்ட வழங்கல் பெண் அலுவலரிடம் நகை பறிப்பு:2 வாலிபர்கள் கைது

வெப்படை அருகே வட்ட வழங்கல் பெண் அலுவலரிடம் 7 பவுன் நகையை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-11 18:06 GMT
பள்ளிபாளையம்:
வட்ட வழங்கல் பெண் அலுவலர்
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் வசந்தி (வயது 31). இவர் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது மொபட்டில் சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.
சேலம் செல்லும் சாலையில் வெப்படை அருகே உள்ள தனியார் நூல்மில் பகுதியில் அந்த வாலிபர்கள் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
வாலிபர்கள் கைது
இந்த துணிகர சம்பவம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று போலீசார் வெப்படை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் தேவனாங்குறிச்சியை சேர்ந்த அருண் (23), டேவிட் (27) என்பதும், வட்ட வழங்கல் அலுவலர் வசந்தியிடம் 7 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருண், டேவிட்டை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்