ஓட்டு எந்திரத்தில் பொருத்தும் சின்னங்களுடன் கூடிய சீட்டு புதிதாக அச்சடிப்பு

சின்னம் தெளிவாக இல்லை என வேட்பாளர்கள் புகாரால், சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்கு ஓட்டு எந்திரத்தில் பொருத்தும் சின்னங்களுடன் கூடிய சீட்டு புதிதாக அச்சடிக்கப்பட்டது.

Update: 2022-02-11 17:52 GMT
சிவகாசி, 
சின்னம் தெளிவாக இல்லை என வேட்பாளர்கள் புகாரால், சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்கு ஓட்டு எந்திரத்தில் பொருத்தும் சின்னங்களுடன் கூடிய சீட்டு புதிதாக அச்சடிக்கப்பட்டது. 
மாநகராட்சி தேர்தல்
சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டு எந்திரங்கள் மற்றும் கூடுதல் எந்திரங்கள் என மொத்தம் 135 ஓட்டுஎந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளள.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களுடன் கூடிய சீட்டு பொருத்தும் பணி நடை பெற்றது. முதல் கட்டமாக 1 முதல் 10 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் முன்னால் இந்த பணி நடைபெற்றது. அப்போது முக்கிய அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் தங்களது கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என்றும், சுயேச்சை சின்னங்கள் தெளிவாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.  இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியின் கவனத்துக்கு சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கொண்டு சென்றார். கலெக்டரின் ஆலோசனைக்கு பின்னர் வாக்காளர்களின் விவரங்கள் புதிதாக தெளிவாக அச்சிடப்பட்டு, ஓட்டு எந்திரங்களில் பொருத்தப்படும் என்று வேட்பாளர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.
சீட்டு பொருத்தும் பணி 
இதை தொடர்ந்து ஓட்டு எந்திரத்தில் சின்னங்களுடன் கூடிய சீட்டு பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
மாலை 6 மணிக்கு இந்த பணி மீண்டும் தொடங்கும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணிக்கு ஒரு சில வேட்பாளர்கள் மட்டும் மாநகராட்சி அலுவலகம் வந்தனர். இதையடுத்து 7 மணிக்கு வாக்கு எந்திரத்தில் சின்னங்களுடன் கூடிய சீட்டு பொருத்தும் பணி தொடங்கியது. 
அந்த சீட்டுகள் இருந்த பெட்டி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்த காகிதத்தில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கையெழுத்திட்டார். அதை தொடர்ந்து அனைத்து எந்திரங்களிலும் வேட்பாளர்களின் விவரங்களுடன் கூடிய சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது. 

மேலும் செய்திகள்