திமுக கூட்டணி மகத்தான வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

Update: 2022-02-11 17:48 GMT
அனுப்பர்பாளையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
 செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 22-வது வார்டு செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூர் நெசவாளர் காலனியில் நேற்று நடைபெற்றது. தி.மு.க. 22-வது வட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கொ.ம.தே.க. மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ ரவி முன்னிலை வகித்தார். வடக்கு மண்டல செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார். தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வடக்கு மாநகர செயலாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி, ம.தி.மு.க. பகுதி செயலாளர் தளபதி பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மகத்தான வெற்றி பெறும்
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வார்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது இன்றைய சூழலை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை போதிய சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் என்ன செய்தார்கள் என்று தெரியாத நிலை நிலவுகிறது. நலிவடைந்து வரும் பின்னலாடை தொழிலை பாதுகாக்கவும், திருப்பூருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் கொ.ம.தே.க. மாநகர இளைஞரணி செயலாளர் மாடிக்கோவில் செல்வக்குமார் நன்றி கூறினார். இதில் கொ.ம.தே.க. மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் வேலுமணி, தி.மு.க. 21-வது வார்டு செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்