ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா வெளி மாவட்ட பக்தர்களுக்கு தடை

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவில் வெளி மாவட்ட பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து கோவை கலெக்டர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-02-11 17:43 GMT
கோவை

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவில் வெளி மாவட்ட பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து கோவை கலெக்டர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மயான பூஜை, குண்டம் இறங்குதல் விழா மற்றும் கோவை பெரியக்கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆகிய விழாக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- 
ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மயான பூஜை வருகிற 14-ந் தேதியும், கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் திருவிழா மார்ச் 2-ந் தேதியும் நடக்கிறது. 

திருவிழா நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். தீயணைப்பு வாகனம் தயார்நிலையில் கோவில் வளாகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்க வேண்டும்.

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்

கோவிலில் பாதுகாப்பு பணிகளை போலீசார் சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக தடை யில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும். 

குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் அமைத்தல், தற்காலிக கழிப்பிட வசதிகள், குப்பைகளை அகற்றுதல் மற்றும் தேர் செல்லும் பாதையில் உள்ள மரக்கிளைகள் மற்றும் விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை 

திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தேவையான பஸ் வசதிகள் செய்ய வேண்டும். மேலும், தேர் செல்லும்போது பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திங்கட்கிழமை மாசாணியம்மன் கோவில் மயான பூஜை திருவிழா, 16-ந் தேதி நடைபெறும் தேர் வடம் பிடித்தல் மற்றும் குண்டம் பூ வளர்த்தல், 17-ந் தேதி நடைபெறும் குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, போலீஸ் துணை கமிஷனர் ஜெயசந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், உதவி ஆணையாளர் (இந்து சமய அறநிலையத்துறை) கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்