காதலர் தின கொண்டாட்டம் ஓசூரில் இருந்து 50 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
காதலர் தின கொண்டாட்டத்தையொட்டி ஓசூரில் இருந்து 50 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஓசூர்:
காதலர் தின கொண்டாட்டத்தையொட்டி ஓசூரில் இருந்து 50 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காதலர் தினம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ரோஜா மலர் உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதியாகும். ஓசூரை சுற்றியுள்ள பாகலூர், பேரிகை மற்றும் தளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோஜா தோட்டங்களிலும், பசுமைக்குடில்கள் அமைத்தும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் தாஜ்மகால், நோப்ளஸ், ஸ்வீட் அவலன்ச், பீச் அவலன்ச், கோல்டு ஸ்டிரைக், பஸ்ட் ஒயிட், கிராண்ட் காலா, சாவரின் பஸ்ட் ரெட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த மலர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் காதலர் தின விழா கொண்டாட்டங்களுக்காக வளைகுடா நாடுகள், துபாய் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதேபோல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் ரோஜா மலர்கள், உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தின் காரணமாக வெளிநாடுகளில் ரோஜா மலருக்கு வரவேற்பு குறைந்துள்ளது. மேலும், ஏற்றுமதி செய்வதிலும் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாலும், உள்நாட்டு தேவைக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் இருந்து வருவதாலும், மலர் விவசாயிகள் உள்நாட்டு விற்பனையையே அதிகம் விரும்புகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையாலும், தமிழகத்தில் வீசிய புயல் தாக்கத்தினாலும் ரோஜா மலர் தோட்டத்தில் ‘டவுனி மைல்டுயு’ என்ற நோய் தாக்கி செடிகளும், பூக்களும் பாதிக்கப்பட்டு உற்பத்தி மிகவும் குறைந்து போனது. இருந்தபோதிலும், குறைந்தபட்சம் 50 லட்சம் மலர்களை காதலர் தின கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஓசூர் பகுதி மலர் விவசாயிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் சந்தையில் அதிக விலை
இந்தநிலையில், உள்ளூர் சந்தைகளில் ரோஜா மலருக்கு அதிக விலை கிடைப்பதால், மலர் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஏற்றுமதி தரம் வாய்ந்த உயர்ரக ஒரு ரோஜா மலர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. 20 பூக்கள் கொண்ட 1 கட்டு, ரூ.400 வரை விற்கப்படுகிறது. இதனால், மலர் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.