நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு

குடியிருப்பு பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2022-02-11 17:16 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்
 மனு 
கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யசோதவிடம் அப்பகுதி மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட முனையனூர் கிராமம் சின்ன கிணத்துப்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு 1983-ம் ஆண்டு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினர். வாழ்க்கையில் பின்தங்கிய எங்களுக்கு வாழ்க்கையை மேம்படுத்தும் நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி தரவும் அரசு இந்த இலவச வீட்டுமனை வழங்கியது. 
தற்போது அனைவரும் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். மேலும் அப்பகுதியில் குடியிருப்புக்கு அருகில் உள்ள இடங்களில் வம்சாவழியாக மாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன், முருகன், மதுரைவீரன், பட்டவன் ஆகிய தங்களது குலதெய்வங்களை வழிபட்டு ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருகிறோம். 
நீர்த்தேக்க தொட்டி
மேலும் குடியிருப்புக்கு அருகே உள்ள இடங்களில் நீண்டகாலமாக திருவிழா காலங்களில் பொங்கல் வைப்பது, தீர்த்தக்குடம் எடுப்பது, அக்னிச்சட்டி, அலகு குத்துதல், மொட்டை அடிப்பது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட கோவில் சம்பிரதாயங்களை அந்த பகுதியில் தான் நடத்தி வருகிறோம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தில் தற்போது அரசின் சார்பாக நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். எங்களுக்கு ஒதுக்கிய வீட்டு மனைகளின் அருகிலேயே இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டினால் எங்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படும். 
வேறு இடத்தில்...
இப்பகுதிகளில் நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைக்கிறது. மேலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் ஓர் நீர்த்தேக்கத் தொட்டி கட்ட முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆகவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கட்டாமல் அதே கிராமத்தில் வேறு இடங்களில் அதே திட்டத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டினால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. எனவே தாங்கள் தங்களது பகுதிக்கு நேரில் வந்து எங்களது வாழ்க்கை முறையைப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்