சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தபோது சிறுமியை மடக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நச்சலூர்
பாலியல் தொல்லை
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி, சவாரிமேடு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி சிறுமி நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை சக தோழிகளுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கருவூரான் மேடு என்ற பகுதியில் சென்றபோது சரக்கு வேனில் காய்கறி விற்றுக்கொண்டு வந்த தோகைமலை அருகே உள்ள கொசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் வினோத் (என்கிற) வினோத்குமார் (வயது 20), இனுங்கூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் பள்ளி சிறுமியிடம் பாலியல் சம்பந்தமாக பேசி தொல்லை கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்சோவில் கைது
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்துள்ளனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்குமார், சிறுவன் மற்றும் சரக்கு வேனையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் உடனே இதுகுறித்து குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் காய்கறி விற்ற சரக்கு வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.