விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி படிக்க அமெரிக்கா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவரான சிவபெருமான் தனது விடா முயற்சியால் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி படிக்க அமெரிக்கா செல்கிறார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவரான சிவபெருமான் தனது விடா முயற்சியால் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி படிக்க அமெரிக்கா செல்கிறார்.
கிராம மாணவர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சின்னஞ்சிறிய கிராமம்தான், நரசிங்ககூட்டம்.
மின்வசதி கூட இல்லாத மண்சுவர் கொண்ட ஓட்டு வீட்டில் முனியசாமி, பூபதி தம்பதியினருக்கு பிறந்தவரான சிவபெருமான் அருகில் உள்ள கடலாடிக்கு 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வந்தார். இரவில் நிலவொளியில் தனது கல்வியை மேம்படுத்தி வந்தார்.
இவரின் தாயார் பூபதி சமையல் உதவியாளராக ரூ.2 ஆயிரம் சம்பளத்துடன் வேலை பார்த்ததுடன், தயிர் விற்ற பணத்தில் குடும்பம் நடத்தி காப்பாற்றி வந்துள்ளார். இதனால் குடும்ப வறுமையை உணர்ந்து தெருவில் நிலவொளியில் படிக்கும்போதே அப்போது வானில் கண்டு ரசித்த நிலவும், நட்சத்திரங்களும் சிவபெருமானின் மனதில் விண்வெளி ஆராய்ச்சி விதையை ஊன்றியது. 10-ம் வகுப்பு தேர்வில் 433 மதிப்பெண் பெற்றதால் கணிதம் பாடம் தேர்வு செய்தார்.
எலைட் பள்ளி
அப்போது ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நந்தகுமார் முயற்சியால் உருவாக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு எலைட் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்தது. கடலாடி பள்ளியில் கணிதத்திற்கு ஆசிரியர் இல்லாமல் படித்த நிலையில் எலைட் பள்ளியில் கணிதம் கற்றுக்கொள்ள சிரமப்பட்டுள்ளார். கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணனின் தனி கவனத்தினால் கணிதம் சிவபெருமானின் கைகளில் சர்வசாதாரணமாக விளையாட தொடங்கியது. வாரந்தோறும் அப்போதைய கலெக்டர் நந்தகுமார் நேரில் வந்து ஊக்கமளித்தது சிவபெருமானுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. ஆசிரியர்களின் ஊக்கத்தினால் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1086 மதிப்பெண்கள் பெற்றார்.
இயற்பியலில் 200, கணிதத்தில் 199, வேதியியலில் 198, உயிரியலில் 192 என இவரின் திறமையால் பொறியியல் கல்வியில் சேர 199 கட்ஆப் மதிப்பெண் பெற்றார். இதன்படி குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி.யில் பி.டெக். ஏரோநாட்டிகல் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கவுன்சிலிங்கிற்காக இந்த கல்லூரிக்கு செல்ல வாழ்க்கையில் முதல் ரெயில் பயணம் மேற்கொண்டார். அப்போது இவரை கலெக்டரின் உதவியாளர் கதிரவன், கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணனும் ரெயிலில் அழைத்து சென்றபோது நம் கிராமத்தை தவிர வளர்ந்த பெரிய பெரிய விசயங்கள் இந்த உலகில் நிறைய உள்ளது என்பதை முதல் ரெயில் பயணத்தில் சிவபெருமான் கண்ணால் கண்டு வியந்தார்.
ஆங்கிலவழி கல்வி
ஒருவழியாக கல்லூரியில் சேர்ந்தாகிவிட்ட நிலையில் கல்வி கட்டணத்தினை சில நல்இதயங்கள் உதவியதால் கட்டணத்தினை கட்டி பயின்றார். தமிழ்வழியில் பயின்றதால் ஆங்கில வழியில் கல்விகற்க சிவபெருமான் சிரமப்பட்டார். அங்கு ஆராய்ச்சியில் கொண்ட ஆர்வத்தினால் சிவபெருமான் உருவாக்கிய போர் விமானங்கள் மோதலை தடுக்கும் ஆராய்ச்சி திட்டத்திற்கு பல்கலைக்கழகத்தின் நிதி உதவி கிடைத்தது. பி.டெக் முடித்த நிலையில் எம்.டெக் படிக்க பலமுறை முயன்று தோல்வி ஏற்பட்ட நிலையிலும் விடாது முயன்று கான்பூர் ஐ.ஐ.டி.யில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் கல்வியை உதவித்தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. அங்கு பேராசிரியர் மங்கல் கோத்தாரி விண்வெளித்துறை ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கபடுத்தினார்.
இவ்வாறு எம்.டெக் முடித்ததும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய ஆதரவுடன் இயங்கும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.எச்.டி. கல்வி படிக்க விரும்பி உள்ளார்.
ஆய்வு
இவரின் ஆர்வத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அங்கு இவர் பி.எச்டி. படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளி ஆய்வு துறையில் சிவபெருமான் நுழைந்துள்ளார். அதாவது, சிறுகோள்களைச் சுற்றி செயற்கைகோள்களை எப்படி சிறப்பாக இயங்க செய்ய முடியும் என்று தனது ஆய்வினை சிவபெருமான் மேற்கொள்வதோடு கிரகங்கள் தொடர்பான தனது ஆய்வினை தொடர உள்ளார்.
ஆரம்பம் முதல் இன்றுவரை கலெக்டர் நந்தகுமார் உதவியாக இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஏழை மாணவரை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பி உதவி செய்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி படித்து வரும் சிவபெருமான் விசா வந்துவிட்டால் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார். தனக்கு உதவிய அப்போதைய கலெக்டர் நந்தகுமார் மட்டுமல்லாது ஆதரவளித்த ஆசிரியர்கள் மற்றும் நல்உள்ளங்களுக்கு சிவபெருமான் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.