ஹிஜாப் விவகாரம்: அனைத்து சமுதாயத்தினருக்கும் ஆடை சுதந்திரம் உண்டு கடலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

ஹிஜாப் விவகாரத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் ஆடை சுதந்திரம் உண்டு என கடலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-11 16:17 GMT

கடலூர், 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பே சிதறி விட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆனால் தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். அதுபோல நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்றும் செல்வாக்கை மக்களிடம் பெற்றுள்ளது.

நீட் விலக்கு

முதல்-அமைச்சர் சட்டப்பேரவையை கூட்டி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். இந்த முறை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 

ஆளுநருக்கு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் உள்ளது. அதாவது அந்த மசோதாவில் திருத்தம் அல்லது விளக்கம் கோர வேண்டும் என்றால் திருப்பி அனுப்பலாம்.

ஆனால் தற்போது ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை திருப்பி அனுப்பவில்லை, மாறாக அதனை நிராகரித்தார். அதனை நிராகரிக்கக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அவர் அதிகார வரம்பு மீறல் செய்துள்ளார். அவர் அந்த மசோதாவை முறையாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நீட் விலக்கு வேண்டும் என்பது தான் அனைவருடைய நிலைப்பாடு. அதனை யார் கொண்டு வந்தார்கள், எப்படி வந்தது என்பது தற்போது முக்கியமில்லை. காங்கிரஸ் கட்சியினரே நீட் வேண்டாம் என தி.மு.க. அரசு எடுத்த முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஆடை சுதந்திரம்

ஹிஜாப் என்கிற உடை அணியும் சுதந்திரம் இஸ்லாமிய சமுதாய பெண்களுக்கு உண்டு. அவர்களுக்கு மட்டுமில்லை உடை அணியும் சுதந்திரம், மத நம்பிக்கையிலான சுதந்திரம் அனைத்து சமுதாயத்தினருக்கும் உண்டு. ஆனால் சன் பரிவார் கும்பல் திட்டமிட்டு, மாணவர்களிடையே இத்தகைய முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே காவி துண்டு அணிவதும், நீல துண்டு அணிவது, இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதும் மாணவ சமுதாயத்தை பிளவுப்படுத்தும் நடவடிக்கையை பா.ஜ.க. உள்ளிட்ட சன் பரிவார் கும்பல் மேற்கொள்கிறது. இது நாட்டை நாசப்படுத்துகிற முயற்சியாகும். அதனை ஜனநாய கட்சிகள் ஒருங்கிணைந்து வன்மையாக கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்