சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை சாலையோரத்தில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
கூடலூர்
முதுமலை சாலையோரத்தில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
வனப்பகுதியில் வறட்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கோடை வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக முதுமலை கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகிறது.
தொடர்ந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களையும் தின்று சேதப்படுத்தி வருகிறது. வழக்கமாக முதுமலை சாலையோரத்தில் ஏராளமான மான்கள் கூட்டமாக நின்று பசும் புற்களை மேய்ந்து கொண்டு இருக்கும்.
சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்
ஆனால் தற்போது வறட்சியால் பசுமை இழந்து வனப்பகுதி காணப்படுவதால் மான்களும் இடம்பெயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் முதுமலை சாலையோரத்தில் அதிகளவு காணப்படுகிறது. சில சமயங்களில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மரங்களின் நிழலில் படுத்துக்கிடப்பதை காண முடிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடிக்குச் செல்லும் சாலையோரத்தில் சுமார் 40 அடி தூரத்தில் ஒரு மரத்தின் நிழலில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்து இருந்தது. மேலும் அப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்தபடி இருந்தது.
கவனமுடன் செல்ல வேண்டும்
பின்னர் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த சிறுத்தைப்புலி எழுந்து புதர்களுக்குள் ஓடி மறைந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, உயிர்ச்சூழல் மண்டலத்தில் ஒவ்வொரு விலங்குகளும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது.
காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் இரை தேடி சிறுத்தைப்புலிகள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.