மதுரவாயல் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை

மதுரவாயல் அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் இருந்து குதித்து 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-02-11 00:40 GMT
பூந்தமல்லி,

சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில் 6-வது மாடியில் வசித்து வருபவர் அருண் சவுன் (வயது 42). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஆருஷ் (13). இவர், அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். நேற்று காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஆருஷ் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் அவரை தேடினர்.

அப்போது அதே அடுக்குமாடி குடியிருப்பின் ‘சி’ பிளாக்கின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் ஆருஷ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், ஆருஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆருஷின் தந்தை அவரை மேல்படிப்புக்கு வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் தெரிகிறது. அத்துடன் அவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதையும் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு தூங்கிய ஆருஷ், நள்ளிரவில் எழுந்து தனது வீட்டில் இருந்து ‘சி’ பிளாக் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள 6-வது மாடி வராண்டாவில் உள்ள ஜன்னல் வழியாக அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலைக்கு முன்பாக ஆருஷ் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “எனக்கு மன அழுத்தம் தாங்க முடியவில்லை. எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா, உனது உடலை நன்றாக பார்த்துக்கொள். அப்பா, நீங்கள் இதுபோல் எப்போதும் காமெடியாக பேச வேண்டும். அண்ணா, என்னை மன்னித்துவிடு” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் நெற்குன்றம், சக்தி நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவருடைய இளைய மகன் அஜய் (16). அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க மதுரை சென்றுவிட்டனர். வீட்டில் அவர்களது 2 மகன்கள் மட்டும் இருந்தனர்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மூத்த மகன், வீட்டின் உள்ளே தனது தம்பி அஜய், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார், விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்