சேலம் ரெயிலில் சிக்கிய 4 கிலோ தங்க நகைகளுக்கு ரூ.10¾ லட்சம் வரி, அபராதம் வசூல்-வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ நகைகளுக்கு வரி மற்றும் அபராத தொகையாக ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் வசூலித்தனர்.

Update: 2022-02-10 23:18 GMT
சேலம்:
ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ நகைகளுக்கு வரி மற்றும் அபராத தொகையாக ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் வசூலித்தனர்.
தங்க நகைகள்
சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஈரோடு ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை பார்த்ததும் ஒருவர் வேகமாக சென்றார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது கோவை செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்த அழகிரி (வயது 46) என்றும், கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 4 கிலோ தங்க நகைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 200 ஆகும். அந்த நகைகள் கோவையில் இருந்து திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு கொடுப்பதற்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அதற்கு முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
அபராதம்
பின்னர் அந்த நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு முறையாக வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்தினர். அப்போது அவற்றுக்கு வருமான வரி கட்ட வில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நகைகளுக்கான வருமான வரி மற்றும் ரெயிலில் கொண்டு செல்லப்பட்டதற்கான அபராதம் என மொத்தம் ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 252 விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் நேற்று சேலம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து அபராத தொகையை செலுத்தி விட்டு நகையை பெற்றுச்சென்றார்.

மேலும் செய்திகள்