ஏ.டி.எம். எந்திரத்தில் தானாக வந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்
ஏ.டி.எம். எந்திரத்தில் தானாக வந்த பணத்தை டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த கோட்டமேட்டுபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 45). இவருடைய மகன் சச்சின் (26). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஓமலூரில் மேட்டூர் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு உள்ள ஒரு எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த மற்றொரு எந்திரத்தில் பணம் எண்ணும் சத்தம் கேட்டு உள்ளது. சிறிது நேரத்தில் அந்த எந்திரத்தில் இருந்து பணம் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சச்சின், அந்த எந்திரத்தில் இருந்து வந்த ரூ.9,500-ஐ ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு தனது தந்தையுடன் சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் வடிவேலனிடம் ஒப்படைத்தனர். சச்சினின் இந்த செயலுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி, சச்சினின் தந்தை பாலசுப்பிரமணியம் ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றபோது இதேபோல் தானாக எந்திரத்தில் இருந்து வந்த ரூ.10 ஆயிரத்தை ஓமலூர் போலீசில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.