144 மது பாட்டில்கள், 91 துண்டுகள் பறிமுதல்
144 மது பாட்டில்கள், 91 துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
தீவிர வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் நகராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்னுத்துரை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
144 மது பாட்டில்கள்
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் தேர்தல் பற்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்த முத்துகருப்பனின் மகன் பெரியசாமி (வயது 21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், பெரம்பலூர் நகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
91 துண்டுகள்
இதேபோல் பெரம்பலூர் நகராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி கதிர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 15-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பலூர்- ஆலம்பாடி ரோடு சமத்துவபுரம் அருகே சுமங்கலி நகர் 5-வது குறுக்கு தெருவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒருவர் வெள்ளை நிற துண்டுகள் அடங்கிய பண்டல் ஒன்றை கொண்டு சென்றார். இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பெரம்பலூர்-துறையூர் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரவணன்(வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த துண்டுகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.4 ஆயிரத்து 550 மதிப்பிலான 91 வெள்ளை நிற துண்டுகளை பறிமுதல் செய்து பெரம்பலூர் நகராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.