உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிருமா?
வடக்குமாங்குடி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகள் ஒளிருமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மெலட்டூர்:
வடக்குமாங்குடி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகள் ஒளிருமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உயர்கோபுர மின் விளக்குகள்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே வடக்குமாங்குடி ஊராட்சியில் பெருங்கரை கிராமத்தில் அங்காடி அருகே கிராமமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்ட சில மாதத்திலேயே பழுதடைந்து விட்டதால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மின் விளக்கு அமைக்கப்பட்டு பயன் இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பழுதடைந்த மின்விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.
பழுதை சரி செய்து...
பெருங்கரை கிராமத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிராதது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது ‘உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு 10 மாதங்கள் தான் ஆகிறது. உயர்கோபுர விளக்குகள் பொருத்தப்பட்ட 4 மாதத்திலேயே பல்புகள் ஒளிரவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் பல்புகள் ஒளிராதது குறித்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். ஆனால் இன்னும் சரிசெய்யாமல் உள்ளனர்’ என கூறி உள்ளனர்.
மின் விளக்குகள் ஒளிராததால் இரவு நேரத்தில் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பழுதை சரி செய்து உயர்கோபுர மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.