மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற 8 பேர் கைது
மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி
திருச்சி மாநகரில் கல்லூரிகள், பள்ளிகள், மத்திய பஸ்நிலைய பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி அரியமங்கலம் ரெயில் நகரில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் கைது
மேலும், அரியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜும் தனியாக அப்பகுதியில் கண்காணித்து வந்தார். இந்தநிலையில் ரயில் நகரைச் சேர்ந்த முகமது யூசுப் (வயது 46) என்பவர் போதை மாத்திரைகளை மாணவர்களிடம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின்பேரில் போலீசார் முகமது யூசுப்பை கைது செய்து, அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் போதை இருக்கும் என்று கூறி மாணவர்களிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுபோல மேலும் பலர் போதை மாத்திரைகளை விற்பது தெரியவந்தது.
கும்பல் சிக்கியது
அவர் கொடுத்த தகவலின்பேரில், அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம், பாலக்கரை, அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்த கும்பல் சிக்கியது.
அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த், வடக்கு காட்டூரை சேர்ந்த ஷெப்ரின் ஆகியோரை அரியமங்கலம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இதுபோல், கண்டோன்மெண்ட் முடுக்குப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்ராஜா, கல்லுக்குழியை சேர்ந்த ஜெயராமன், கோகுல், பிரவீன் ஆகியோரை முடுக்குப்பட்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர். பின்னர் 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.