குடியரசு தின அலங்கார ஊர்தி தர்மபுரி வந்தது

குடியரசு தின அலங்கார ஊர்தி தர்மபுரி வந்தது. இந்த ஊர்தியை மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.

Update: 2022-02-10 18:22 GMT
தர்மபுரி:-
குடியரசு தின அலங்கார ஊர்தி தர்மபுரி வந்தது. இந்த ஊர்தியை மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.
மலர் தூவி வரவேற்பு
விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி திண்டுக்கல்லில் இருந்து நேற்று தர்மபுரி வந்தது.
நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி லட்சுமி நாராயண பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மற்றும் அதிகாரிகள் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்றார்கள். இதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய பாலசேனா படைப்பிரிவில் வீராங்கனையாக பணிபுரிந்த தர்மபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி சிவகாமி அம்மாள், அலங்கார ஊர்தியை நேரில் பார்வையிட்டு மலர்தூவி வரவேற்றார்.
ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
முன்னதாக மாவட்ட எல்லையில் பாளையம் புதூர் சுங்கச்சாவடி அருகே தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோர் அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மாவீரன் பூலித்தேவன், மாவீரன் அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோவில் கோபுரம் ஆகியவை உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்தியை கல்லூரி தாளாளர், நிர்வாகிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் வரவேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
கலை நிகழ்ச்சிகள்
இதைத்தொடர்ந்து கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிறப்பை போற்றும் சொற்பொழிவுகள், கருத்துரைகள் நடந்தன.
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை கோவை மண்டல இணை இயக்குனர் சுப்பிரமணியம், தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தாசில்தார் வினோதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகிலா, கவுரி, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி தலைவர் முருகன், கல்லூரி முதல்வர் தண்டபாணி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அலங்கார ஊர்தியானது லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்