கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க.வினர் வெற்றி பெற்று விட்டதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

Update: 2022-02-10 18:03 GMT
கரூர்
நொய்யல்
பிரசார கூட்டம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதையொட்டி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து காகிதபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:- 
பொய்யான வாக்குறுதிகள்
தமிழகத்தில் அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் அதிக முறை ஆட்சி புரிந்தது கிடையாது. ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்கள். ஜெயலலிதா கண்ட கனவுகளையும், திட்டங்களையும், அதன்பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சி நடந்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளோம். 
2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி புரியும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் எப்படியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து தான் எனது முதல் கையெழுத்து என்று கூறினார். அது நடந்ததா? இல்லை. மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தான் நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
ராஜினாமா செய்ய தயாரா?
அப்போது தி.மு.க.வை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய மந்திரியாக இருந்தார். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது. தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் முடிவு ஆகும். எப்படி காவிரி விவகாரத்தில் 17 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோமோ? அதேபோல் நீட்தேர்வு விவகாரத்திலும் சட்டரீதியாக சந்திக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளில் ரூ.1,000-மும் அதன்பிறகு ரூ.2,500-ம் கொடுத்தோம். பொங்கல் பொருட்களும் தரமானதாக இருந்தது. ஆனால் தி.மு.க. கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் தரமானதாக இல்லை என்று மக்களே தெரிவிக்கின்றனர். மேலும், பணம் எதுவும் கொடுக்கவில்லை. தி.மு.க.வின் பரிசு தொகுப்பு வடமாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது. 
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால் மு.க.ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என கூறினார். விசாரணை கமிஷன் அறிக்கை கொடுத்ததில் பொருட்கள் எல்லாம் தரமற்றது என அறிக்கை கொடுத்துள்ளனர். தற்போது தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய தயாரா?. அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வரலாம். வேறு எந்த கட்சியிலும் இதுபோன்று வர முடியாது. மற்ற கட்சிகளெல்லாம் வாரிசு கட்சிகள்.  
வெற்றி உறுதி
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்று கூறினார்கள். அதுவும் செய்யவில்லை. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நமது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்