போலீசார் கொடி அணிவகுப்பு
சீர்காழி, குத்தாலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சீர்காழி:-
சீர்காழி, குத்தாலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சீர்காழி
சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித அச்சம் இன்றி வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீர்காழியில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயந்தி, சந்திரா, நாகரத்தினம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். போலீசாரின் கொடிஅணிவகுப்பு சீர்காழி போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கச்சேரி ரோடு, பிடாரி தெற்கு வீதி, கடைவீதி, பிடாரி வடக்குவீதி, பழைய பஸ் நிலையம் வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
குத்தாலம்
குத்தாலத்தில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, பெரம்பூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, மணல்மேடு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குத்தாலம் கடைவீதியில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க தொடங்கிய இந்த அணிவகுப்பு மேலசெட்டித்தெரு, ஹைஸ்கூல் ரோடு வழியாக சென்று போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.