பெண்ணாடத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வைத்த பேனரால் பரபரப்பு

பெண்ணாடத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் வைத்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-10 16:41 GMT

பெண்ணாடம், 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் கருங்குழி தோப்பு பகுதியில் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களில் 15 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 15 குடும்பத்தினருக்கு இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பு பெறுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் தர ரசீது வழங்கப்பட வேண்டும். அப்போது தான் மின் இணைப்பு கேட்டு இவர்களால் விண்ணப்பிக்க முடியும். எனவே இந்த ரசீது கேட்டு இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இவர்களது கோரிக்கைக்கு இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை. 


தேர்தல் புறக்கணிப்பு 

இந்த நிலையில் தங்களுக்கு உரிய ரசீது மற்றும் பட்டா வழங்கிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும்  ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அந்த இயக்கத்தின் தலைவர்பத்மநாபன் தலைமையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம் என்று கூறி அந்த பகுதியில் அறிவிப்பு பேனரை வைத்தனர். 

 இதுபற்றி அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, இது தொடர்பாக தாசில்தாரிடம் பேசி உரிய நடவடிககை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தார். 

அதன்பேரில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி வைத்த பேனரை அப்பகுதியை சேர்ந்த பொது மக்களே அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்