வத்தலக்குண்டு அருகே அண்ணன், அண்ணியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
வத்தலக்குண்டு அருகே அண்ணன், அண்ணியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சி கருப்பமூப்பன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் ரமேஷ்(வயது 31). இவரது மனைவி பாண்டியம்மாள்.
ரமேசுக்கும் அவரது தம்பி சக்திவேலுக்கும் (27) இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சக்திவேல் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் ரமேஷ் மற்றும் அண்ணி பாண்டியம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதை ரமேஷ் தட்டிக்கேட்டார். அப்போது அவரை சக்திவேல் அரிவாளால் வெட்டினார். அப்போது அதை பாண்டியம்மாள் தடுத்தார். இதில் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார்.