தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயிலில் வந்த 1,600 டன் ரேஷன் அரிசி
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயிலில் 1,600 டன் ரேஷன் அரிசி வந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான ரேஷன் அரிசி, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு நேற்று ஒரு சரக்கு ரெயில் வந்தது. அந்த ரெயிலில் 26 பெட்டிகளில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தெலுங்கானாவில் இருந்து 1,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் திண்டுக்கல்லில் பழனி ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் சேமித்து வைக்கப்படும். பின்னர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என்றனர்.