லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் இடைத்தரகராக செயல்பட்டவரும் சிக்கினார்.

Update: 2022-02-10 14:24 GMT
ஊட்டி

சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ரூ.4 ஆயிரம் லஞ்சம்

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கரியமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ். இவர் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லதா(வயது 35) என்பவரிடம் விண்ணப்பித்தார். 

இதற்கிடையில் லதா, சிட்டாவில் பெயர் சேர்க்க இடைத்தரகர் கண்ணன் மூலம் சுந்தர்ராஜிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர், ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

ரசாயனம் தடவிய நோட்டுகள்

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) திவ்யா மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க கூறினர். அதன்படி அவர் இன்று மாலை 4 மணியளவில் இடைத்தரகர் கண்ணனுடன் குந்தா தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். 

அங்கு பணியில் இருந்த லதாவிடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்தார். இதை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் லஞ்சமாக வாங்கிய பணத்தில் அவரது கைரேகை பதிவாகி இருந்தது. 

அலுவலகத்தில் சோதனை

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான போலீசார் தாலுகா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் லதா, இடைத்தரகர் கண்ணன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது.

அதன்பின்னர் சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் இடைத்தரகர் கண்ணன் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். மேலும் லதா மீது துறை ரீதியான விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்