‘ஹிஜாப்’ அணியும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவிட கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட மறுத்த ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை தலைமை நீதிபதிக்கு மாற்றி அறிவித்துள்ளது.
பெங்களூரு:
ஹிஜாப் விவகாரம்
கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) இந்து-முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார்.
இதை கண்டித்து அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது.
அரசியல் சாசனம்
இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 6 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, தங்களை ஹிஜாப் அணிந்து அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. முதல் நாளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார்.
அவர் வாதிடுகையில், ஆடை அணிவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு அவற்றுக்கு எதிரானது என்றும் வாதிட்டார். அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-
அரசு முடிவு எடுக்காது
பள்ளி-கல்லூரிகளில் மாணவர்கள் சீருடை குறித்து அந்தந்த நிர்வாகங்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் மாநில அரசு முடிவு எடுக்காது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்பதற்கு குரானில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. சீருடை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அந்தந்த பள்ளி-கல்லூரி வளர்ச்சி குழுக்கள் முடிவு செய்கின்றன.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் வக்கீல் கேட்டுள்ளார். அவ்வாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் அது மனுதாரரின் கூற்றை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். அதனால் இடைக்கால உத்தவை பிறப்பிக்கக்கூடாது.
இவ்வாறு பிரபுலிங்க நாவதகி கூறினார்.
கூடுதல் நீதிபதிகள் அமர்வு
அதைத்தொடர்ந்து நீதிபதி கிருஷ்ண தீட்சித் கூறுகையில், " இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றலாம் என்று கருதுகிறேன். நீங்கள் (ஆளும்-எதிர்தரப்பு வக்கீல்கள்) என்ன சொல்கிறீர்கள். நீங்கள் ஒப்புக்கொண்டால் நான் அந்த முடிவை எடுக்கிறேன்" என்றார்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, வழக்கை அமர்வுக்கு மாற்றுவது என்பது உங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது" என்றார்.
மேலும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய் ஹெக்டே வாதிடுகையில், "மாணவர்களின் ஆண்டு தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளன. வழக்கை அமர்வுக்கு மாற்றுவது என்பது கோர்ட்டின் விருப்பம்" என்றார்.
அதைத்தொடர்ந்து மீண்டும் பேசிய நீதிபதி கிருஷ்ண தீட்சித், "இந்த வழக்கு அரசியல் சாசனம் தொடர்பு உடையதாக உள்ளது. இதில் அரசியல் சாசனம் தொடர்பான கேள்விகள் அடங்கியுள்ளன.
தலைமை நீதிபதிக்கு மாற்றம்
இந்த வழக்கிற்கு சுமார் 6 வழக்குகளின் தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். இதில் வக்கீல்கள் சுட்டி காட்டியுள்ள கேள்விகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. எனவே இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும் இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.
இந்த வழக்கு அமர்வில் விசாரணை நடத்த தகுதியானதாக உள்ளது. அதனால் இந்த கோர்ட்டு, இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றுகிறது. கூடுதல் நீதிபதிகளை கொண்ட அமர்வை அமைப்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு பதிவாளர் உடனடியாக அனுப்ப வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இன்று விசாரணை
இந்த நிலையில் ஐகோர்ட்டு தனி நீதிபதி பரிந்துரையை ஏற்று கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நேற்றிரவு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், ஹிஜாப் விவகார வழக்கு தொடர்பாக எனது தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜிவுல்லா முகைதீன் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளார்.