புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-02-09 21:20 GMT
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
 விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சியின் வடக்கு தெருவில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்தையா, ஆலங்குளம்.
குடிநீர் தேைவ
  மதுரை மாவட்டம் அதலை ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமம், ஏ.டி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழங்கப்படும் குடிநீரும் உப்புநீராக உள்ளதால் தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ராதாகிருஷ்ணன், மதுரை.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை நாற்சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் சிலர் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக வேகத்தில் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது. இதனால் பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் சிக்னல் அமைத்து சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர்தீன், ராமநாதபுரம்.
தூர்வாரப்படாத கண்மாய்
 சிவகங்ைக மாவட்டம் கல்லல் நடராசபுரம் ஊராட்சியில் உள்ள பிலாமிச்சம்பட்டி கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கண்மாய் நீரை அடிப்படை தேவைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கண்மாயின் நீர்வரத்து கால்வாய்கள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ரவீந்திரன், சிவகங்கை.
உபயோகப்படாத பஸ் நிலையம் 
  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம் நீண்ட நாட்களாக உபயோகிக்கப்படாமல் உள்ளது. பயணிகள் பஸ் நிலையத்தை பயன்படுத்தாமல் வெளிபுறத்தில் பஸ்ஏறி செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் நிலையத்தில் இருந்து  பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், திருத்தங்கல்.
மதுக்கடை அகற்றப்படுமா?
 மதுரை திருமங்கலம் பஸ்நிலையம்  அருகில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பஸ் நிலையம் வரும் மதுபிரியர்கள் சிலர் அதன் அருகில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பஸ் நிலையம் வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி மதுபானக்கடையை வேறு இடத்திற்கு இ்டமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
அரசன், திருமங்கலம்.
பஸ் வசதி 
 மதுரை மாவட்டம் அவனியாபுரம் அண்ணா பஸ் நிலையம் வழியாக எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் செல்ல குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிலர் தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக கூறிவருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஜேந்திரன், மதுரை.

மேலும் செய்திகள்