இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் மனைவி விஜயா (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் விஜயா தனது கணவர் வீட்டில் இருந்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு கணவர் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விஜயா அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து ஆய்க்குடியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் அதே கடையில் வேலை பார்த்த மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து திருப்பூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு வந்தார்.
அப்போது அவரது தாயார் மீண்டும் நீ உனது கணவர் வீட்டிற்கு தானே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட விஜயா உடனடியாக அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது விஜயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆய்க்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்தார். விஜயாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.