பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டி
பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் 21 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு மொத்தம் 112 பேர் போட்டியிடுகின்றனர். இதில், தி.மு.க. 18 வார்டுகளிலும், மீதமுள்ள வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை தலா ஒரு வார்டுகளில் போட்டியிடுகிறது. ம.தி.மு.க., தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆனால், 21 வார்டுகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.
பா.ஜ.க. 9 வார்டுகளில் போட்டி
நாம் தமிழர் கட்சி 12 வார்டுகளிலும், பா.ஜ.க. 9 வார்டுகளிலும், பா.ம.க., அ.ம.மு.க. தலா 7 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 6 வார்டிலும், இந்திய ஜனநாயக கட்சி 3 வார்டுகளிலும், தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. தலா ஒரு வார்டிலும், 14 வார்டுகளில் 24 சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். கடந்த முறை 15 வார்டுகளில் போட்டியிட்டு 3 வார்டுகளில் வெற்றி தே.மு.தி.க. இந்த முறை ஒரே ஒரு வார்டில் மட்டும் போட்டியிடுகிறது. கடந்த முறை தனித்து 11 வார்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்து போட்டியிட எண்ணியது. ஆனால் வார்டு ஒதுக்கீடு பிரச்சினையால் நகராட்சியில் 6 வார்டுகளில் தனித்து போட்டியிடும் என அறிவித்த காங்கிரஸ் கட்சி ஒரு வார்டிலும் போட்டியிடாமல் போனது அக்கட்சிக்காரர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை 3 வார்டுகளில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க. இந்த முறை முன்னேறி 9 வார்டுகளில் தனித்து போட்டியிடுகிறது.
நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளர்
கடந்த முறை ஒரு வார்டில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை ஒரு வார்டில் கூட போட்டியிடவில்லை. கடந்த முறை 21 வார்டுகளில் தலா 6 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க., சுயேட்சைகளும், 3 வார்டுகளில் தே.மு.தி.க.வும் வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட நேரடி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
ஆனால் இந்த முறை நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி முதன்முறையாக பெண்கள் பொதுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், வெற்றி பெற்று வந்தால் தி.மு.க.வில் 11-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரும், அ.தி.மு.க.வில் 12-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரும் நிறுத்தப்படுவார்கள் என்று அந்தந்த கட்சியினரிடையே பரவலாக பேசப்படுகிறது.