தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடியை பறக்க விடுவதுதான் தேசியமா?

தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடியை பறக்க விடுவதுதான் தேசியமா? என அருப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பரபரப்பாக பேசினார்.

Update: 2022-02-09 20:00 GMT
அருப்புக்கோட்டை,
தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடியை பறக்க விடுவதுதான் தேசியமா? என அருப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பரபரப்பாக பேசினார். 
தேர்தல் பிரசாரம் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று திறந்த வேனில் சென்று அருப்புக்கோட்டை பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். 
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டை, புளியம்பட்டி, சிவன்கோவில் சந்திப்பு, புதிய பஸ் நிலையம், சொக்கலிங்கபுரம் உள்பட 12 இடங்களில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பிரசாரத்தின் போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:- 
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பஸ்களில் மகளிர் இலவச பயணம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
பா.ஜ.க. புறக்கணிப்பு 
தி.மு.க. அரசு தொலைநோக்கு பார்வையுடன்தான் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருகிறது. 
மத்திய பா.ஜனதா அரசு நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்கள் படிக்க முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நீட் விலக்கு  மசோதாவுக்காக கூட்டப்பட்ட சட்டமன்ற கூட்டத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு உள்ளீர்கள். ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடியை பறக்க விடுவதுதான் தேசியமா? பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள்தான் முடிவு செய்யவேண்டும். எனவே பா.ஜனதாவுக்கு ஒரு ஓட்டு போட்டால் கூட தமிழ்நாடு என்ன நிலைக்கு ஆளாகும்? என்பதை நினைத்து பாருங்கள். 
வாக்குறுதிகள்
பா.ஜனதாவையும்,, அவர்களுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வையும் பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பகுதிக்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கினர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.4 ஆயிரம் அனைவருக்கும் வழங்கினோம்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அருப்புக்கோட்டையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் 6 மாதத்திற்குள் விரைந்து நிறைவேற்றப்படும்.
பாலமாக இருக்க வேண்டும்
உங்கள் கோரிக்கைகளுக்கு எந்தநேரமும் அமைச்சர்களை சந்திக்கலாம் என்றும் மக்களோடு நெருக்கமாக உள்ள ஆட்சி தி.மு.க. ஆட்சி.
உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது. எனவே நீங்கள் அனைவரும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்