ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 380 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து நேற்று நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 380 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-09 19:25 GMT
நாகர்கோவில், 
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து நேற்று நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 380 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்களும், மாணவிகளும் காவித் துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நபில் அஹமத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கண்டன உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அசைன் ஜவாஹரி, பொருளாளர் செய்யது அகமது கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டம்-கைது
ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு அனுமதியில்லாததால் வடசேரி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அந்த வகையில் 380 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு வடசேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இரவில் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்