நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்கள் ஏமாற வேண்டாம் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு
ஏழை-எளிய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளதால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்கள் ஏமாற வேண்டாம் என்று மேட்டுப்பாளையத்தில் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
மேட்டுப்பாளையம்
ஏழை-எளிய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளதால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்கள் ஏமாற வேண்டாம் என்று மேட்டுப்பாளையத்தில் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
பிரசார கூட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 19 வார்டுகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் மேட்டுப் பாளையம் ரெயில் நிலைய ரோட்டில் நடந்தது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. அதுபோன்று இந்த தேர்தலிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.
பாடுபடுவோம்
பா.ஜனதா கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் கடைக்கோடி வேலைக்காரனாக இருந்து பணியாற்றுவார்கள். 132 கோடி மக்களின் கடைநிலை ஊழியர் என்றுதான் பிரதமர் மோடி தன்னை கூறி வருகிறார்.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் பா.ஜனதா வேட்பாளர்கள் ஒரு சல்லி காசு கூட வாங்காமல் பணியாற்றுவார்கள் என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன்.
தமிழகத்தில் நேர்மையான நல்லாட்சியை பா.ஜனதா கட்சி தான் தரும். தமிழகத்தில் மாற்றத்தை தாருங்கள், உலகத்திலேயே தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாக உருவாக்க நாங்கள் பாடுபடுவோம்.
ஏமாற வேண்டாம்
மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சிகளில் பா.ஜனதாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்கள் ஏமாற வேண்டாம். தி.மு.க. மற்றும் தமிழக அரசு இதை அரசியலாக்க வேண்டாம்.
நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர். அதேபோல் தேசியக்கொடியை அவமதிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளி கல்லூரி மாணவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.