மாமியாரின் இறுதி சடங்கிற்காக வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் சாவு

மாமியாரின் இறுதி சடங்கிற்காக வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-09 17:22 GMT
பென்னாகரம்:
மாமியாரின் இறுதி சடங்கிற்காக வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
இறுதி சடங்கு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பனங்கள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 47). மெக்கானிக். இவர் தனது மாமியார் இறந்த 9-ம் நாள் இறுதி சடங்கிற்காக மனைவி சின்னபொண்ணு, மகன் ரஞ்சித்குமார், மகள் ரஞ்சிதா மற்றும் உறவினர்களுடன் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்தார்.
இறுதி சடங்கு முடிந்த பின்னர் அவர்கள் ஒகேனக்கல்லில் சாரணர் கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது மாணிக்கம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாணிக்கத்தை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
பரிதாப சாவு
இதுகுறித்து ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தை காவிரி ஆற்றில் தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர், மாணிக்கத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தகவல் அறிந்து வந்த ஒகேனக்கல் போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரின் இறுதி சடங்கிற்கு வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்