தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-09 16:43 GMT
புதுக்கோட்டை
சாலையோர ஆக்கிரமிப்புகளால் அவதி
பெரம்பலூர் போஸ்ட் ஆபிஸ் தெரு சாலையோர வியாபாரிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரத்தில் வியாபாரிகளால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
புதுக்கோட்டை மாவட்டம், வீராப்பட்டி  ஊராட்சி, காலாடிப்பட்டி கடை வீதிகளில் உள்ள ஓட்டல்களில் பயன்படுத்திய கோழி இறைச்சி கழிவுகளையும்,  குப்பைகள் அனைத்தையும் விராலிமலை-புதுக்கோட்டை நெடுஞ்சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், காலாடிப்பட்டி, புதுக்கோட்டை

அரசு பஸ் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், திருச்சியில் இருந்து மலம்பட்டி வழியாக தினமும் இலுப்பூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் ஆவூருக்கு வந்து செல்வதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆவூருக்கு அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னாசிமுத்து, ஆவூர். புதுக்கோட்டை.

உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அண்ணா சிலையில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்று உள்ளது. அதில் ஒரு விளக்கு மட்டும் எரிகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அறந்தாங்கி, புதுக்கோட்டை.


காட்சிப் பொருளாக மாறிய குடிநீர் தொட்டி
கரூர் மாவட்டம் நொய்யல் ரெயில்வே கேட்டில் இருந்து குறுக்குச்சாலை செல்லும் தார் சாலை ஓரத்தில் அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதனருகே குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  தற்போது மின்மோட்டார் பழுதடைந்து குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், நொய்யல், கரூர்.

ரெயில்வே நடைமேடை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில்  நிலையத்திற்கு தினசரி 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த ரெயில் நிலையம் வழியாக பயணம் செய்கின்றனர். தற்போது ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இன்று வரை முடிந்தபாடில்லை. இதனால் இரவு நேரங்களில் 2-வது நடைமேடையில் ரெயில்கள் நிற்கும்போது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நடைமேடை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குளித்தலை, கரூர்.

மேலும் செய்திகள்