கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2022-02-09 16:18 GMT
 திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை கையில் பையுடன் முதியவர் ஒருவர் வந்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தான் வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து, தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் ஓடிச் சென்று முதியவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றிய போலீசார், முதியவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் தேவரப்பன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65) என்பது தெரியவந்தது. மேலும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் சிலர் அங்குள்ள கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதாகவும் கூறினார்.
இதையடுத்து முதியவரை சமாதானப்படுத்திய போலீசார் கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி அவரிடம் தெரிவித்தனர். மேலும் இதேபோல் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்