தங்கச்சிமடம் நகருக்குள் புதிய பாலம் அமைக்க திட்டம்
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தங்கச்சிமடம் நகருக்குள் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மண் ஆய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம்,
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தங்கச்சிமடம் நகருக்குள் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மண் ஆய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தங்கச்சிமடம்
இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. அதுபோல் ராமேசு வரம் ராமநாதசாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
ராமேசுவரம் வரும் அனைத்து வாகனங்களும் பாம்பனில் இருந்து தங்கச்சிமடம் வழியாகவே ராமேசுவரம் வந்து செல்லவேண்டும். தங்கச்சிமடம் பகுதியில் சாலையின் இருபுறமும் வரிசையாக கடைகள் மற்றும் வீடுகள் அமைந்து உள்ளதோடு சாலை மிக குறுகலாக இருப்பதாலும் அடிக்கடி வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆய்வு
இந்த நிலையில் தங்கச்சிமடம் பகுதியில் வாகன நெருக் கடியை குறைப்பதற்காகவும் விபத்தை தடுக்கவும் ராமேசுவரம் வரும் வாகனங்கள் விரைவாக வந்து செல்ல வசதியாக தங்கச்சிமடம் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் புதிதாக பாலம் ஒன்று கட்டுவதற்கு திட்டமிடப் பட்டு உள்ளது. அதற்காக தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மண் ஆய்வு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த மண் ஆய்வு பணியில் மதுரையை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதுடன் 100 அடி ஆழம் வரையிலும் துளை போடும் எந்திரம் மூலம் மண்ணின் மாதிரியை ஆய்வுக்காக சேகரித்து வருகின்றனர்.
பாலம்
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் ராமேசுவரம் வந்த போது தங்கச்சிமடம் பகுதியில் சாலை மிக குறுகலாக இருப்பதாகவும் வாகன நெருக்கடியும் அதிகம் உள்ளதாகவும் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித் திருந்தார்.
அதன் அடிப்படையில் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து் சுமார் 900 மீட்டர் தூரத்தில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக மண்ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலம் தற்போது உள்ள சாலையில் இருந்து 5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும். தங்கச்சிமடத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய பாலம் முழுமையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இடத்தில் மட்டுமே அமைய உள்ளது.
நெருக்கடி குறையும்
புதிய பாலம் கட்டப்படும் பட்சத்தில் ராமேசுவரத்தில் இருந்து வெளியூர்களுக்கு மீன்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் இந்த பாலம் வழியாக எளிதில் வேகமாக சென்று விட வாய்ப்பாக அமையும். இதன்மூலம் தங்கச்சிமடம் நகருக்குள் போக்கு வரத்து நெருக்கடி முழுமையாக குறைவதுடன் விபத்தும் முழுமையாக தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.