தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானியம்
நாகை மாவட்டத்தில் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்
வெளிப்பாளையம்:-
நாகை மாவட்டத்தில் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளை ஈ தாக்குதல்
நாகை மாவட்டத்தில் 2,680 எக்டேர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தலைஞாயிறு, வேதாரண்யம், கீழையூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.
தென்னை மரங்களை தவிர வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களையும் இந்த வெள்ளை ஈக்கள் தாக்குகிறது. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலும் பரவாமல் தடுக்க வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மஞ்சள் பொறி
மஞ்சள் நிறத்துக்கு வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை உள்ளதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை எக்டேருக்கு 20 என்ற எண்ணிக்கையில், 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது, பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும்.
என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கும். கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டேருக்கு 1000 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுவதால் நல்ல பயன் கிடைக்கும்.
மானியம்
அதிகளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த எக்டேருக்கு மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள் 20-ம், கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகள் ஆயிரமும் மானிய விலையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.