கட்டையால் அடித்து தொழிலாளி கொலை

தஞ்சை அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-08 21:49 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர்.
கூலித் தொழிலாளிகள்
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவருடைய மனைவி மாரியம்மாள்(வயது 60). இவர்களுக்கு முத்தமிழ் ராஜா(40), வைரமணி(36) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேருமே கூலி வேலை செய்து வந்தனர். இதில் முத்தமிழ்ராஜாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
வைரமணிக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தினமும் குடித்து விட்டு வந்து அண்ணன் மற்றும் தாயிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வைரமணி தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி குடிபோதையில் மாரியம்மாள், முத்தமிழ் ராஜாவிடம் தகராறு செய்துள்ளார்.
அடித்துக்கொலை
இதில் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் தலை, வாயில் கட்டையால் தாக்கப்பட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் வைரமணி இறந்து கிடந்தார்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணன்-தாய் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமணியை கொலை செய்தது தொடர்பாக அண்ணன் முத்தமிழ்ராஜா, தாய் மாரியம்மாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்