மங்களூருவில் ரூ.3.48 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்

மங்களூருவில், ரூ.3.48 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-08 21:40 GMT
மங்களூரு:

போலீசார் சோதனை

  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜே பகுதியில் சிலர் திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்ய நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

  அப்போது அந்த பகுதியில் 6 பேர் கும்பல் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தது. அவர்கள், போலீசாரை கண்டதும் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். இதனால் சுதாரித்த போலீசார், 6 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த பையை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர்.

ரூ.3.48 கோடி திமிங்கல உமிழ்நீர்

  அப்போது அந்த பையில் திமிங்கல உமிழ்நீர் இருந்தது. இதுதொடர்பாக 6 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்த பிரசாந்த்(வயது 24), பெங்களூரு வீரபத்திரநகர் பகுதியை சேர்ந்த சத்யராஜ்(32), மங்களூரு அருகே டெங்கபதவு கிராமத்தை சேர்ந்த ரோகித்(27), விருபாக்‌ஷா(37) அட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(37), நாகராஜ்(31) ஆகிய 6 பேர் என்பதும், இவர்கள் தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவரான சேது மாணிக்கம் என்பவரிடம் திமிங்கல உமிழ்நீர் வாங்கி வந்து விற்பனைக்காக மங்களூருவுக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

6 பேர் கைது

  இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  அவர்களிடமிருந்து 3 கிலோ 480 கிராம் எடையுள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3.48 கோடி ஆகும். கைதான 6 பேர் மீது கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்