கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ந்தேதி தொடக்கம்

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-02-08 21:33 GMT
பெங்களூரு:

கொரோனா பாதிப்பு

  கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனால் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால், பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்ேதர்வு நடக்குமா என்று சந்தேகம் இருந்து வந்தது.

  இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், கல்வித்துறை அதிகாரிகளுடன் பொதுத்தேர்வை நடத்துவது குறித்து சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பொதுத்தேர்வு

  இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. கூடிய விரைவில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  அதன்படி கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 16-ந்தேதி தொடங்கி மே மாதம் 6-ந்தேதி வரை நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

  தேர்வு அட்டவணை விவரம் பின்வருமாறு:-

தேர்வு அட்டவணை

  ஏப்ரல் 16-ந்தேதி கணிதம், கல்வியல், அடிப்படை கணிதம், 18-ந்தேதி அரசியல் அறிவியல், புள்ளியல், 19-ந்தேதி தகவல் தொழில்நுட்பம், ரிடைல், ஆட்டோ மொபைல், ஹெல்த்கேர், பியூட்டி வெல்நஸ், 20-ந்தேதி வரலாறு, இயற்பியல், 21-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராட்டியம், உருது, சமஸ்கிருதம், அரபிக், பிரெஞ்ச், 22-ந்தேதி லாஜிக், வணிக படிப்பு, 23-ந்தேதி கர்நாடக இசை, இந்துஸ்தான் இசை, சைக்காலஜி, வேதியியல், 25-ந்தேதி பொருளாதாரம், 26-ந்தேதி இந்தி, 28-ந்தேதி கன்னடம், 30-ந்தேதி சமூகவியல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மே மாதம் 2-ந்தேதி, உயிரியல், நிலவியல், 4-ந்தேதி ஆங்கிலம், 6-ந்தேதி விருப்ப கன்னடம், கணக்கியல், புவியியல், வீட்டு அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

  இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடக்க உள்ளது. மாணவ-மாணவிகள் கேள்வி தாளை படித்து பார்க்க 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு காலை 10.15 மணி முதல் தொடங்கும்.

மேலும் செய்திகள்