நியாய விலைக்கடை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்
தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாய விலைக்கடை பணியாளர்கள்
அகவிலைப்படி 31 சதவீதம் வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் நியாய விலை கடை பணியாளர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் நியாய விலைக்கடை பணியாளர்கள் நேற்று ஒருநாள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1183 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் 836 நியாய விலைக்கடை பணியாளர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கரிகாலன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவை சேர்ந்த நியாயவிலைக் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.