தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்பு

கபிஸ்தலம் அருகே தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை அரசு அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2022-02-08 21:07 GMT
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை அரசு அதிகாரிகள் மீட்டனர். 
மயான கொட்டகை
கபிஸ்தலம் அருகே உள்ளிக்கடை பெருமாள் கோவில் கிராமத்தில்  ஆதிதிராவிடர் வகுப்பினர் பயன்படுத்தி வந்த மயான கொட்டகை பகுதி் மற்றும் அருகே உள்ள இடத்தை  தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக கரும்பு பயிரிட்டு வந்தார். இதனால் உள்ளிக்கடை பெருமாள் கோவில் பகுதியில் எந்த ஒரு துக்க நிகழ்வு ஏற்பட்டாலும் மயான கொட்டகைக்கு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டு சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த அரசு அதிகாரிகள் இடத்தை நில அளவை செய்து மயான கொட்டகைக்கு இடம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். 
கம்பிவேலி
இதன்படி நேற்று அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் வெட்டப்பட்டு இருந்த நிலையில் அரசு சார்பில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் நேதாஜி, மற்றும் பலர் சம்பந்தப்பட்ட இடத்தை  அளவீடு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு  அந்த பகுதியில் கம்பிவேலி அமைத்தனர். இதனால் பல ஆண்டுகளாக  இந்த பகுதியில் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்