வைத்தியநாதசுவாமி, பிரகதீஸ்வரர் கோவில்களில் மாசிமக திருவிழா
வைத்தியநாதசுவாமி, பிரகதீஸ்வரர் கோவில்களில் மாசிமக திருவிழா நடைபெற்றது.
கீழப்பழுவூர்:
மாசிமக திருவிழா
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வைத்தியநாதசுவாமி, சுந்தராம்பிகை எழுந்தருளினர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் வைத்தியநாதசுவாமி சுந்தராம்பிகையுடன் ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பிரகதீஸ்வரர் கோவில்
இதேபோல் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்த நிலையில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகளும், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் குடும்பத்தினரும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பின்னர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் வருகிற 17-ந்தேதி சுவாமி வீதி உலா நடைபெற்று, காஞ்சி காமகோடி பீடம் பக்தர்கள் உபயத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.