மீன் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்
கொட்டாரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது மீன் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ4 லட்சம் பறிமுதல் செய்தனர்
கன்னியாகுமரி:
கொட்டாரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது மீன் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அரிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் கொட்டாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.4 லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த மீன் வியாபாரியான மவுலின் என்பவர் ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500 கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விஜய பிரபா தலைமையிலான மற்றொரு பறக்கும் படையினர் கொட்டாரம் பகுதியில் நடத்திய சோதனையில் சுசீந்திரத்தை சேர்ந்த பவித்ரா என்பவர் தனது வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர், இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கொட்டாரம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியான அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்ட மூர்த்தியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்கள் காண்பித்தால் பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.