மோட்டார்சைக்கிள் மீது மினி லாரி மோதி சுகாதார ஆய்வாளர் பலி
மோட்டார்சைக்கிள் மீது மினி லாரி மோதி சுகாதார ஆய்வாளர் பலியானார்.
போளூர்
போளூர் காதர் பாட்சா தெருவில் வசிப்பவர் விஜயா. இவர் வடமாதிமங்கலம் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மூத்த மகன் ஜெயசூரியா (வயது 23) ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணிமுடிந்ததும் மோட்டார்சைக்கிளில் போளூருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். போளூர்-வேலூர் சாலையில் பாக்மார்பேட்டையில் வந்தபோது எதிர்திசையில் சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயசூரியா தூக்கி வீசப்பட்டதில் அதே இடத்தில் துடி துடித்து இறந்தார். இதனிடையே விபத்து நடந்ததும் மினி லாரி நிற்காமல் சென்று விட்டது.
இது குறித்து அவரது தாயார் விஜயா, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான மினிலாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.