குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக கூறி நண்பரிடம் 3 கார்கள் வாங்கி மோசடி செய்த வாலிபர் கைது
குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக கூறி நண்பரிடம் 3 கார்கள் வாங்கி மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
வேலூர் கஸ்பா சின்னமசூதி தெருவை சேர்ந்தவர் ஹாரூன்கான் (வயது 28). இவர் வேலூர் முஸ்லிம் அரசுப்பள்ளி ஜங்ஷன் பகுதியில் கார் ஒர்க்ஷாப் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் சின்ன அல்லாபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த வினோத்குமார் (29) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்றுகூறி 3 கார்களை ஹாரூன்கானிடம் இருந்து பெற்றுள்ளார். ஆனால் இதுவரை அந்த கார்களை வினோத்குமார் திருப்பி கொடுக்கவில்லை.
அதனால் அதிர்ச்சி அடைந்த ஹாரூன்கான் இதுகுறித்து வினோத்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கார்களை சில நாட்களில் கொடுத்து விடுவேன் என்று கூறி உள்ளார். ஆனாலும் கார்களை வழங்காமல் மீண்டும் காலதாமதம் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து ஹாரூன்கான் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், வினோத்குமார் 3 கார்களை வாங்கி திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
----
Reporter : S. PONSINGH_Staff Reporter Location : Vellore - VELLORE