‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நத்தம் கிராமத்தில் ஏழூர்பட்டியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாகராஜசோழன், நத்தம், திருச்சி.
அதிக கட்டணம் வசூல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலிண்டரின் விலையை விட கூடுதலாக ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். குறிப்பாக சில்லரை இல்லை என்று ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாயமாக வசூலிக்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவன அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், புதுக்கோட்டை.
செடி, கொடிகளை அகற்ற வேண்டும்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூரில் இருந்து செல்வநகர் வழியாக முத்தனூர் வரை விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வகையில் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா ராணி, கரூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம் 22-வது வார்டு தோப்புத்தெரு விஸ்தரிப்பு நுழைவுவாயில் பகுதியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, தோப்புத்தெரு விஸ்தரிப்பு, திருச்சி.
திருச்சி மாவட்டம் உறையூர் 58-வது வார்டு பகுதியில் கட்டிட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. மேலும், சாக்கடை கால்வாயில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டிட கழிவுகளை அகற்றுவதுடன், சாக்கடையில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிராஜ், திருச்சி.