ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற காளை சாவு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற காளை சாவு
திருப்பத்தூர்,
சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்களாப்பட்டியைச் சேர்ந்த தனபால், ஜெயபால் என்ற சகோதரர்கள் மஞ்சுவிரட்டு காளையை வளர்த்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடந்தன.
இதில் மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் இந்த காளையும் கலந்துகொண்டது. இதனால் மெரினாக்காரி காளை என்று அழைக்கப்பட்டு வந்தது.
இந்த காளை பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நேற்றுமுன்தினம் அந்த காளை இறந்தது. அந்த காளைக்கு பல்வேறு கிராமத்தில் இருந்து வந்த மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் அந்த காளையை பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.